QMC AWARDS 2021

அரசியல் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது- 2021 வழங்கும் விழா நேற்று 31 மார்ச் 2022 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடந்தது. இவ் விழாவில் பல்துறை பிரமுகர்கள், ஆசிரியர், மாணவர் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.

முன்னாள் பேராயர் தேவசகாயம் தலைமையில் திரு ராம் விருதுகளை வழங்கினார். முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன் வாழ்த்துரையில்
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நீதிமன்றத்தை நாடி இருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. திரு ராம் தொடுத்த பெகாஸுஸ் என்கிற இஸ்ரேலின் உளவு மென்பொருள் விவகார வழக்கு மற்றும் இத்தகைய பல வழக்குகள் போன்று காலம் கடத்தப்பட்டு நீர்த்துப்போகச் செய்யப்பட்டுவிடும். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலான கடுமையான போராட்டத்தின் விளைவாக விவசாயிகள் அரசை பணிய வைத்தனர். இது மக்கள் சக்திக்கு கிடைத்த மகத்தான வெற்றி. வரக்கூடிய காலங்களில் இத்தகைய பல வெற்றிகள் ஜனநாயக அமைதி போராட்டத்திற்கு கிடைக்கும்”
என்று அவர் கூறிய கருத்து விவசாயிகளின் மகத்தான வெற்றியையும் விருதிற்கு நாம் செய்த தேர்வையும் அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது. தங்களின் பாசிச ஆட்சியை நிலைநிறுத்த நாட்டின் ஜனநாயக அமைப்புகளை அழித்துவரும் ஆட்சியாளர்களுக்கு அதற்கு துணை செய்யும் விதமாக சரித்திரத்தையும் திரித்து எழுதுவது அவசியமாகிறது. உண்மை வரலாற்றை மாற்றும் முயற்சிக்கு பெரும் தடையாக இருக்கும் சரித்திரப் பேராசிரியர் இர்பான் ஹபீப் போன்றவர்களின் துணிச்சலான போராட்டம் மற்றும் உழைப்பை அவரை தேர்வு செய்ததை திரு. ராம் தம் வாழ்த்துரையில் மனதார பாராட்டியது அறக்கட்டளைக்கு பெருமை சேர்த்தது.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக அரசே தொடுத்து வரும் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளை கண்டித்து நாட்டின் முக்கிய பத்திரிக்கையாளர்கள் பிரமுகர்களும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அளித்துள்ள கடிதத்தை குறிப்பிட்டும் திரு ராம் விளக்கினார்.

இர்பான் ஹபீப் அறிவுறுத்தலின் பேரில் டெல்லி மூத்த பத்திரிகையாளர் வெங்கிடேஷ் கிருஷ்ணன் விருது பட்டயத்தை அவர் சார்பாக பெற்று விருது தொகையை விவசாயிகள் அணிக்கு அளித்தது அனைவராலும் வரவேற்கப்பட்டது. கல்லூரி இயக்குனர் டாக்டர் ரஃபி வரவேற்புரையுடன் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாதிக், ஜமாஅத்துல் உலமா தலைவர்களில் ஒருவரான அபூதாஹிர் சிராஜி வாழ்த்துக்களுடனும் பனையூர் தாஜுதீன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது. பாசிச சர்வாதிகார ஆட்சிகள் நிலையானதல்ல. மக்கள் சக்தி முன் ஒரு காலகட்டத்திற்குப் பின் பணிந்தே ஆக வேண்டிய கட்டாயம் இந்த இரு தலைவர்களின் தேர்வில் அழுத்தமாக அமைந்துள்ளதை வலியுறுத்தி நாமும் விருதாளர்களை அறிவித்து வாழ்த்துரை வழங்கினோம்.

குறுகியகால ஏற்பாட்டில் இவ்விழா ஏற்பாட்டிற்கு உதவிய ஆசிரியர் மாணவர் அலுவலர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரின் ஒத்துழைப்புடன் இவ்விழா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
அனைத்திற்கும் மேலாக இப்பணியை எளிதாக்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி உரித்தாகும்.